கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
கழுகுமலை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கழுகுமலை,
கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூரைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயி. இவருடைய மனைவி இந்திராகாந்தி (வயது 47). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மைப்பாறையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
கழுகுமலை அருகே முக்கூட்டுமலை அருகில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று தங்களது மோட்டார் சைக் கிளை சாலையின் குறுக்காக நிறுத்தி வழிமறித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சென்ற மர்மநபர், இந்திராகாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டனர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story