கட்டண உயர்வினை கண்டித்து மின்சாதனங்களை வீசி எறிந்து நூதன போராட்டம்


கட்டண உயர்வினை கண்டித்து மின்சாதனங்களை வீசி எறிந்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2018 5:00 AM IST (Updated: 7 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண உயர்வினை கண்டித்து மின் சாதனங்களை வீசி எறிந்து சமூக அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

மின்கட்டண உயர்வினால் ஏ.சி., வாஷிங் மெஷின், மிக்சி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இந்த கட்டண உயர்வினை கண்டித்து மின்சாதனங்களை மின்துறையிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதற்காக அண்ணா சிலை அருகே மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து மின்சாதனங்களுடன் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு இயக்க பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் லெனின் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சி பஷீர், தமிழர் களம் அழகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மின்துறை அலுவலகம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையொட்டி மின்துறை அலுவலக மெயின்கேட் பூட்டப்பட்டது. அப்போது ஊர்வலமாக வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த மின்சாதனங்களை மின்துறை தலைமை அலுவலக வளாகத்திற்குள் வீசி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது 50 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

Next Story