வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அரியலூர் கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களுடைய கல்வித்தகுதியை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்து இருக்க வேண்டும்.
மேலும் 31.3.2018 தேதியின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை.
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலு வலக வேலை நாட்களில் முற்பகலில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற மே மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகளுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடனும், மாற்றுத்திறனாளிகள் மேற்படி சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story