மீனம்பட்டி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம்
கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் மீளமுனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி மீளமுனீஸ்வரர் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, தடுப்புக்கட்டைகள் போடப்பட்டன. இதற்கான முன்னேற்பாடு பணிகளை வருவாய்துறையினர் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.
இதையடுத்து நேற்று காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கு அரசு டாக்டர்கள் உடல் தகுதி பரிசோதனை செய்தனர். இதையடுத்து மாடுபிடி வீரர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி முன்னிலையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பின்னர் ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, கறம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 902 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப் பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 250 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் அடக்க வந்த வீரர்களுக்கு சவால் விடும் வகையில் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்களை முட்டி மோதி தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்த 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், குக்கர், உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிப்பு மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story