‘ரோபோ’ பிரம்மா!
தனது ரோபோடிக்ஸ் திறமையால், வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார், சென்னை கல்லூரி மாணவரான ஹேமானந்த்.
எந்நேரமும் ரோபோவியல் குறித்த சிந்தனையிலேயே இருக்கும் ஹேமானந்த், ஓர் இளந் தொழில்முனைவாளரும் கூட. வாருங்கள், ‘ரோபோ’ பிரம்மா ஹேமானந்தைச் சந்திப்போம்...
உங்களைப் பற்றி...
நான் சென்னைவாசி. கொளத்தூர் விநாயகபுரத்தில் பெற்றோர், அண்ணனுடன் வசிக்கிறேன். அப்பா நந்தகோபால் ஒரு துணிக் கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார், அம்மா ஷர்மிளா இல்லத்தரசி. அண்ணன் சண்முகம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான் பூந்தமல்லி நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் மூன்றாமாண்டு படிக்கிறேன்.
நீங்கள் பொறியியல் படிப்பில் விரும்பித்தான் சேர்ந்தீர்களா?
இல்லை. நான் மருத்துவம் பயிலவே விரும்பினேன். தனியார் கல்லூரியில்தான் இடம் கிடைக்கும் என்றநிலையில், அதற்கு குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எனவே பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்ததும், நாம் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக்கூடாது என்று என்னை தனித்து அடையாளம் காட்டிக்கொள்ளும் வகையில் ரோபோடிக்சில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ரோபோடிக்ஸ் தொடர்பான அறிவை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?
இதுதொடர்பான நூல்களைப் படித்தும், இணையத்தில் தேடி அறிந்தும், யூடியூப் பார்த்தும் எனது ரோபோடிக்ஸ் அறிவை வளர்த்துக்கொண்டேன். ஒரு விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டால் அதற்கான வழிகள் தானாகத் திறக்கும் அல்லவா? அதுபோலத்தான் என்னால் ரோபோடிக்ஸ் நுட்பங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
நீங்கள் உருவாக்கிய முதல் ரோபோ சாதனம் பற்றிக் கூறுங்கள்...
கடந்த ஆண்டு, அதாவது நான் பொறியியல் இரண்டாமாண்டு பயிலுகையில் ஒரு முதல் தலைமுறை ரோபோவை உருவாக்கினேன். செல்போன் புளூடூத் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அந்த ரோபோ, அசைவுகளைக் கண்டுபிடிக்கக்கூடியது. எனவே இதை பாதுகாப்பு தொடர்பான பணிகளில் பயன்படுத்தலாம். நான் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கிய அந்த ரோபோவுக்கு தேசிய, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் பரிசு கிடைத்தது.
அடுத்து...?
நான் கூறிய முதல் தலைமுறை ரோபோவின் குறைபாடு, அது குறைந்த அலைவரிசையில் செயல்படக்கூடியது என்பது தான். எனவே அந்த ரோபோவை சற்றுத் தொலைவில் இருந்து இயக்க முடியாது. அந்தக் குறையைக் களையும்வகையில், கிளவுட் முறையில் இயங்கக்கூடிய ஓர் இரண்டாம் தலைமுறை ரோபோவை உருவாக்கினேன். இதை ஆண்டிராய்டு போனுடன் வை-பை முறையில் இணைத்து இயக்கலாம். 66 அடி தொலைவில் இருந்து இதை இயக்க முடியும். இந்த ரோபோவில் காமிரா பொருத்தப்பட்டிருப்பதால், அதன் வழியே பார்த்து நுணுக்கமான பணிகளையும் மேற்கொள்ள இயலும்.
இந்த ரோபோவை எந்த மாதிரியான இடங்களில் பயன்படுத்த முடியும்?
வேதித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தோல் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான இடங்களில் இந்த ரோபோவை பயன்படுத்தலாம். இது கேஸ் கசிவு, 25 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை உயர்வு போன்றவற்றைக் கண்டுபிடித்துக் கூறிவிடும். மனிதர்கள் பணிபுரிய ஆபத்தான இடங்களிலும் இந்த ரோபோவை உபயோகிக்கலாம். இது தொடர்ந்து அனுப்பும் படங்கள் மூலம், குறிப்பிட்ட இடத்தின் நிலையை அறியலாம். இந்த ரோபோவை பயன்படுத்துவதற்கு யூசர் நேம், பாஸ்வேர்டு அவசியம் என்பதால், வேறு யாரும் ‘ஹாக்’ செய்ய முடியாது.
இந்த ரோபோவை எவ்வளவு நாட்களில் உருவாக்கினீர்கள்?
சுமார் 6 மாத கால தொடர் உழைப்பு, முயற்சியில், ரூ. 20 ஆயிரம் செலவில் இந்த ரோபோவை வடிவமைத்தேன்.
இந்த ரோபோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்?
ஐ.இ.டி.இ. எனப்படும் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயர்ஸ் அமைப்பு சென்னையில் நடத்திய தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசும் தங்கப் பதக்கமும் பெற்றேன். மேலும் வேல்டெக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியிலும், ஆந்திர மாநிலம் கரக்கம்பாடியில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கிலும் முதல் பரிசு பெற்றேன்.
அடுத்த முயற்சி...?
நான் இரண்டாவது தலைமுறை ரோபோவை உருவாக்கிய வுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எல்வின்சன் என்பவரை சந்தித்தேன். எனது ரோபோவை பாராட்டிய அவர், அதை பறக்கக்கூடியதாக உருவாக்கினால் ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அதற்கு சுமார் ரூ. 80 ஆயிரம் தேவை. அந்த அளவு பணம் திரட்டியதும் குறிப்பிட்ட ரோபோவை உருவாக்கும் முயற்சியில் இறங்குவேன். நான் எனது ரோபோடிக்ஸ் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் ஜெர்மனி செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்.
அது என்ன ஜெர்மனி செல்லும் வாய்ப்பு?
அறிவியல், தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள் 15 பேரை ஒவ்வோர் ஆண்டும் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று 20 நாட்கள் பயிற்சி அளிக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஒரே மாணவனாக நான் தேர்வு பெற்றுள்ளேன். ஆனால் ஜெர்மனி செல்வதற்கான விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்கு ரூ. 2 லட்சம் வரை ஆகும். என்னால் அவ்வளவு தொகையைத் திரட்ட முடியாது என்றநிலையில், அரசு அல்லது தனியாரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
எதிர்காலத்தில் ரோபோவியலில்தான் உங்கள் பயணத்தைத் தொடர விருப்பமா?
ஆம், அதனால்தான் நான், வை-கேம்ரோ சொல்யூசன்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலம், தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றிப் பயிற்சியளிக்கப் போகிறேன். மலேசியாவில் இருந்து, பாதுகாப்புக்கான ரோபோ அமைப்பை ஏற்படுத்துவதற்கும், இலங்கையில் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் கற்பிப்பதற்கும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள்.
‘பொறியியல் படித்தேன்... பலனில்லை’ என்று புலம்பும் மாணவர்களுக்கு மத்தியில், சர்வதேச அளவில் சிறகடிக்கும் ஹேமானந்த் ஒரு முன்னோடிதான்!
Related Tags :
Next Story