இலவச போக்குவரத்து திட்டத்துக்கு எதிர்ப்பு!
காற்று மாசைக் குறைப்பதற்காக பாரீசில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
பாரீஸ் மேயரின் இந்தத் திட்டத்துக்கு போக்கு வரத்துத் துறை அதிகாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நகரம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதற்கு ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டங்களை பாரீஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ அறிவித்துள்ளார்.
உலகின் பெரிய நகரங்களில் பல, தூய்மையான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காகவும் காற்றின் தரத்தை உயர்த்துவதற்காகவும் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஆனால் இத்தகைய நடவடிக்கையை போக்கு வரத்துத் துறையினர் எதிர்க்கின்றனர். இது தொடர்பாக அத்துறையைச் சேர்ந்த வலேரி பெக்ரெஸ்சி என்ற அதிகாரி கூறுகையில், “பயணிகள் போக்குவரத்துக்குப் பணம் செலுத்தவில்லை என்றால், அதற்குப் பதில் வரி செலுத்துவோர் பணம் செலுத்த வேண்டியிருக்கும்''என்கிறார்.
“நம்முடைய நோக்கம் போக்குவரத்தை நவீனமாக்குவதுதான். பஸ் கட்டணத்தின் மூலம் நமக்கு ஒவ்வோர் ஆண்டும் 3 பில்லியன் யூரோக்கள் வருவாய் வருகிறது. அந்தப் பணம் நமக்குத் தேவை'' என்றார் வலேரி பெக்ரெஸ்சி.
இவர், வருகிற 2020-ம் ஆண்டு மேயர் தேர்தலில் தற்போதைய மேயரை எதிர்த்துப் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரீசில் இருப்பவர்களுக்கு மட்டும் போக்கு வரத்தை இலவசமாக்கிவிட்டு, புறநகர்ப் பகுதியில் இருப்பவர்களைத் தவிக்கவிடுவது சரியில்லை என்பது வலேரியின் கருத்து.
Related Tags :
Next Story