“மக்கள் மீது மத்திய, மாநில அரசுக்கு துளிகூட அக்கறை இல்லை” ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


“மக்கள் மீது மத்திய, மாநில அரசுக்கு துளிகூட அக்கறை இல்லை” ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2018 3:30 AM IST (Updated: 8 April 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு துளிகூட அக்கறை இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 55-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மதியம் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவை, மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

பின்னர் ஜி.கே.வாசன் கிராமமக்களிடம் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உங்களது போராட்டத்திற்கு நாங்கள் துணையாக இருப்போம். ஆலையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கு வேலை பார்த்து இருக்கலாம். ஒப்பந்த பணிகளை எடுத்து இருக்கலாம். அவர்கள் மனசாட்சிக்கு ஏற்ப படிப்படியாக மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மாற்றிக் கொள்ள வேண்டும்“ என்றார்.

தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று, கடல் மற்றும் மனித உயிர்களை அழிக்க கூடிய தொடர் ஆபத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்துகிறது. உடனடியாக இந்த ஆலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே இந்த பகுதி வாழ் மக்களின் கோரிக்கை ஆகும். தூத்துக்குடியில் காற்றில் அமிலம் கலந்து மாசுபடலமாக மாறி வருகிறது என்று அச்சப்படுகிறார்கள்.

இந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் அச்சத்துடனேயே வாழும் சூழல் உள்ளது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான். அவர்கள் முதல் பணியாக மக்களின் அச்சத்தை போக்க ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய வேண்டும். 2-வது பணியாக நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை.

நீர், நிலம், காற்று மற்றும் மக்களை அழிக்கும் செயலை இந்த ஆலை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு பணியை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நியாயமான எதிர்பார்ப்பைத்தான் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இந்த பகுதி மக்கள் மிகவும் ஏழை எளியவர்கள். அவர்கள் உயிருக்கு அஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை பற்றி கூட கவலைப்படாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என்று அஞ்சி இருக்கும் நேரத்தில், இதே மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில அரசுகள் இதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு சந்தேகம், அச்சம் என்றால் அதனை முழுமையாக தீர்க்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. அந்த பணியை அவர்கள் முறையாக, சரியாக செய்ய தவறியதால்தான் இந்த போராட்டம் நடக்கிறது.

இந்த பகுதி மக்களுக்காக பல கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சாதாரண மக்களின் அச்சத்தை 100 சதவீதம் போக்கும் நிலையை அரசு செய்ய வேண்டும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆலைகள் இருக்க கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. த.மா.கா. இந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும். 55 நாட்களாக இந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் மீது துளிகூட அக்கறை இல்லை என்பது தெரிகிறது. மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக மக்கள் பிரதிநிதியோ, அவர்களை சார்ந்தவர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ மக்களின் நியாயமான கோரிக்கையை கேட்டு படிப்படியாக அதனை நிறைவேற்றக்கூடிய உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதைத்தான் வாக்களித்த மக்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்காக எங்களது போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Next Story