தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 8 இடங்களில் போராட்டம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 8 இடங்களில் போராட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 3:45 AM IST (Updated: 8 April 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 8 இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் கடந்த 55 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் ஆகிய கிராமங்களிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். 7 கிராமங்களிலும் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்கள் நல மன்றம் சார்பில் நேற்று முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட தொடங்கி உள்ளனர். அந்த பகுதி மக்கள் ரேஷன் கடை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் 8 இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலக பாமா நேற்று காலை அ.குமரெட்டியபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தேசிய தலைவர் காட்ப்ரேநோபுள் அ.குமரெட்டியபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் அ.குமரெட்டியபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

Next Story