தலைவர், துணைத்தலைவர் தேர்வில் முறைகேடு: கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சாலை மறியல்


தலைவர், துணைத்தலைவர் தேர்வில் முறைகேடு: கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2018 3:30 AM IST (Updated: 8 April 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கூட்டுறவு சங்கத்துக்கான தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இயக்குனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி அல்லிநகரத்தில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ந்தேதி நடந்தது. இதில், 11 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் இருந்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று நடப்பதாக இருந்தது.

இதற்காக பகல் 11 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மனு தாக்கல் செய்ய வந்த இயக்குனர்கள் சிலரிடம் மனுக்களை வாங்க மறுத்துவிட்டதாகவும், அவர்களின் ஆதரவு இன்றி தன்னிச்சையாக தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இயக்குனர்கள் 6 பேர், பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அந்த சங்கத்தின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட சந்திரசேகரன், பாண்டி, சண்முகவேல் உள்ளிட்ட 6 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் 6 பேர் உள்ள நிலையில், மீதம் இருந்த 5 பேரில் தங்களுக்குள்ளாகவே தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறி இருந்தனர். 

Next Story