நிலையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
நிலையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயற்குழு கூட்டம் தென்காசியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சண்முக ராஜன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பொருளாளர் சீனி மோகன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் விசுவாசம், சீத்தாராமன், முன்னாள் வட்ட கிளை தலைவர்கள் குருசாமி, சந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்கள் சார்பாக தஞ்சாவூரில் இன்னும் சில தினங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, தமிழக அரசில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து 2003-க்கு முன்பு இருந்த நிலையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு என்று பிரத்யேகமாக மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும்.
பணி இடங்களை குறைக்கவும், சில பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்துக்கு முன்னதாக தென்காசி வட்ட கிளையின் புதிய கட்டிடத்தை மாநில தலைவர் சண்முக ராஜன் திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story