3 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சிங்காநல்லூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


3 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சிங்காநல்லூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 3:45 AM IST (Updated: 8 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

3 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சிங்காநல்லூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்ட தேர்தல் முடிந்தது. இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 3-ந்தேதி வாங்கப்பட்டது. 4-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை, வாபஸ் ஆகியவை நடைபெற்றன. இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிங்காநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேட்டைக்காரன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வால்பாறை அருகே உள்ள காடம்பாறை நீர்மின் உற்பத்தி சிக்கன கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்வதாக அந்தந்த சங்க அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு நோட்டீசை ஒட்டினார்கள். அதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு 7-ந்தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்த தேர்தல் சில நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

சிங்காநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த கோரி நேற்று காலை கூட்டுறவு சங்கம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாயக்கன்பாளையம் பாசன சபை தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி, த.மா.கா. வட்டார தலைவர் பகவதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாராயணசாமி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூறிய தாவது:-

சிங்காநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்று (நேற்று) தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 3-ந்தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. சங்கத்திற்கு 11 இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் மீனாம்பிகை, சுமதி, முத்துலட்சுமி ஆகிய 3 பெண்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள பொது உறுப்பினர்கள் 6, தனி உறுப்பினர்கள் 2 என தேர்வு செய்ய வேண்டும். இதற்கிடையில் ஆளும்கட்சியில் நிலவும் பிரச்சினை காரணமாக அதிகாரிகள் தேர்தலை நிறுத்தி வைத்து உள்ளனர். எனவே தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். இல்லையெனில் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story