கள்ளப் படகில் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவர் கைது


கள்ளப் படகில் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 8 April 2018 3:45 AM IST (Updated: 8 April 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கடற்கரைக்கு கள்ளப் படகு மூலம் வந்த துருக்கியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக பிளாஸ்டிக் படகு ஒன்று நேற்றிரவு ராமேசுவரம் தேராங்கோட்டை கடற்கரைக்கு ஒருவரை இறக்கிவிட்டு செல்வதாக துறைமுக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் கடற்கரைக்கு சென்று, அங்கிருந்து ஊருக்குள் நடந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் துருக்கி நாட்டை சேர்ந்த மகீர் தேவரிம்(வயது 43) என்பதும், துருக்கியில் அரசுக்கு எதிராக புரட்சிகர இயக்கத்தில் அவர் இருந்ததாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 1993-ம் ஆண்டு தனது நாடான துருக்கியில் இருந்து வெளியேறி இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்பின்பு கடந்த மாதம் 28-ந்தேதி விமானம் மூலம் இலங்கைக்கு சென்று, அங்குள்ள யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இந்தநிலையில் தான் இந்தியாவிற்கு வருவதற்காக இலங்கையில் உள்ள படகு மூலம் செல்வதற்கு பேரம் பேசியுள்ளார். பின்னர் இலங்கையை சேர்ந்த 2 பேர் பிளாஸ்டிக் படகில் மகீர் தேவரிம்மை ஏற்றிக்கொண்டு வந்து தேராங்கோட்டை கடற்கரையில் இறக்கிவிட்டு மாயமாகிவிட்டனர். மகீர் தேவரிம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story