தமிழ் அமைப்புகள்-மாணவர்கள் எதிர்ப்பு: நெல்லையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு நிகழ்ச்சி ரத்து
தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு காரணமாக நெல்லையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
நெல்லை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை நேரில் காண முடியாத ரசிகர்கள் பெரிய திரைகளில் பார்வையிட ‘பேன் பார்க்’ என்ற புதிய அமைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளது.
இதன் மூலம் நேற்று நடைபெற்ற போட்டியையும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2 போட்டிகளையும் நெல்லையில் அகன்ற டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் இதற்கான அரங்கு அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் இந்த அரங்கு தயார் படுத்தப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிரிக்கெட் சங்கத்தினர் செய்து வந்தனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே போல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நெல்லையில் அகன்ற திரையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தமிழ் அமைப்பினர், மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திடீர் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு நிகழ்ச்சியை நேற்று ரத்து செய்தனர். மேலும் நிகழ்சிக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கு, அகன்ற திரை ஆகியவற்றை பிரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story