காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 5:00 AM IST (Updated: 8 April 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை தமிழ் தேசிய பேரியக்க மாநில பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது காலை 7.25 மணி அளவில் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்க மாநில பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 30 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல் தமிழக உழவர் முன்னணி சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக நேற்று மதியம் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது மதியம் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரெயில் சிதம்பரத்துக்கு வந்தது. அந்த ரெயிலை தமிழக உழவர் முன்னணி சங்கத்தினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 13 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story