கடந்த 5 ஆண்டுகளில் இ-சேவை மையங்கள் மூலம் 11½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் கலெக்டர் தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் இ-சேவை மையங்கள் மூலம் 11½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 April 2018 5:30 AM IST (Updated: 8 April 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டுகளில் இ-சேவை மையங்கள் மூலம் 11½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம்,

சேலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு பொது இ-சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், பல்வேறு திட்டங்களில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக அதற்கான சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

தமிழக அரசால் பொதுமக்களுக்கு குறுகிய காலத்தில் அரசின் பல்வேறு சேவைகள் விரைந்து கிடைத்திடும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள அரசு இ-சேவை மையங்கள் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் 13 தாசில்தார் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களில் 202 சேவை மையங்கள், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 150 சேவை மையங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 373 அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 11 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த மையத்தில் வருவாய்த்துறை மூலம் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், விவசாயிகளுக்கான வருமான சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றிதழ், விதவை பெண் சான்றிதழ், முழுபட்டா மாற்றம், இணைப்பு பட்டா மாற்றம், உட்பிரிவு சிட்டா பிரித்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கூறினார்.

Next Story