தார்வார் அருகே, கார் மீது அரசு பஸ் மோதியது: ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் உடல்நசுங்கி சாவு


தார்வார் அருகே, கார் மீது அரசு பஸ் மோதியது: ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் உடல்நசுங்கி சாவு
x
தினத்தந்தி 9 April 2018 3:00 AM IST (Updated: 9 April 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

உப்பள்ளி,

தார்வார் அருகே, கார் மீது அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சுற்றுலா சென்றவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

தார்வார்(மாவட்டம்) தாலுகா முரகட்டி-நிகதி கிராமம் அருகே உப்பள்ளி-கோவா சாலையில் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலையின் எதிரே உத்தர கன்னடா மாவட்டம் தண்டோலியில் இருந்து தார்வார் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் எதிரே வந்த கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதனால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த அல்னாவர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தது தெரியவந்தது. மேலும் 6 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி, உப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த சிறுமி உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர்கள் தார்வார் தாலுகா கந்திஒனியா கிராமத்தை சேர்ந்த இம்ரன் மக்கனர்(வயது 38), அவரது மனைவி அப்ரீனா(28), இந்த தம்பதியின் மகள் ஆயிஷா(4), மற்றும் கார் டிரைவர் என்பது தெரியவந்தது.

மேலும் படுகாயம் அடைந்த 6 பேரும் இம்ரன் மக்கனர் உறவினர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் காரில் உத்தர கன்னடா மாவட்டம் தண்டோலிக்கு சுற்றுலா சென்றதும், அப்போது கார் விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 4 பேர் இறந்ததும், மற்ற 6 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அல்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முன்னதாக விபத்து நடந்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் முரகட்டி-நிகதி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story