கடமலைக்குண்டு அருகே மின்கம்பத்தின் மீது மோதிய அரசு பஸ்


கடமலைக்குண்டு அருகே மின்கம்பத்தின் மீது மோதிய அரசு பஸ்
x
தினத்தந்தி 9 April 2018 3:00 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே மின்கம்பத்தின் மீது அரசு பஸ் மோதியது. இதில் மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கடமலைக்குண்டு,

தேனியில் இருந்து நேற்று காலை 7 மணியளவில், கோம்பைத்தொழு கிராமத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை, கடமலைக்குண்டுவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூர் கிராமத்தில் சாலையோர வளைவில் பஸ் திரும்பிய போது, ஆடு ஒன்று குறுக்கே வந்தது. அந்த ஆடு மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார்.

அப்போது சாலையோரம் உள்ள இரும்பிலான மின்கம்பத்தின் மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மின்கம்பம் சாய்ந்து, பஸ்சின் மேற்கூரையில் விழுந்தது. மேலும் அதன் அருகே இருந்த மற்றொரு மின்கம்பமும் சாய்ந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து, ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்தன.

இதனை கண்ட பயணிகள், ‘அய்யோ அம்மா‘ என்று அலறினர். நல்ல வேளையாக கம்பி அறுந்து போனதால், மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ் மீது மின்சாரம் பாயவில்லை. எனவே பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பஸ் மோதிய மின்கம்பம், காமாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் இருந்து கடமலைக்குண்டு துணை மின்நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டதாகும்.

இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தனியார் காற்றாலை பணியாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தேனியில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள், கொம்புக்காரன்புலியூர் கிராமத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

பொதுமக்கள், கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறினர். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story