விதிகளை மீறும் பட்டாசு ஆலை உரிமம் ரத்து: வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை


விதிகளை மீறும் பட்டாசு ஆலை உரிமம் ரத்து: வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2018 3:15 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் எச்சரித்துள்ளார்.

விருதுநகர்,

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவதால் உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படுகிறது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் பல முறை எச்சரித்தும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. பட்டாசுக்கு தேவையான வெடி மருந்து கலவையை காலை 10 மணிக்குள் தயாரித்து முடித்திட வேண்டும். தட்ப வெப்பநிலை, ஈரப்பதம், வெப்பச்சலனம் ஆகியவை உள்ளதால் பட்டாசு உற்பத்தி செய்வதில் விரைவாக செயல்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும்.

குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பட்டாசுகளை செய்ய கூடாது. மணிமருந்து அலசுதல், செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை அதற்கான அறைகளில் மட்டுமே வைத்து செய்ய வேண்டும். செந்தூரம், ஆன்டிமணி, ஆர்சனிக் போன்ற தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத தகர கொட்டகைகளை உருவாக்கி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடக்கூடாது.

ஆலையில் அமைக்கப்பட்டிருக்கும் இடி தாங்கிகளை அடிக்கடி சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். மரத்தடிகளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. அனுபவம் மற்றும் தேர்ச்சி பெற்ற பணியாளர்களையே மருந்து அலசுதல், செலுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்துதல் வேண்டும். ஆலையினுள் மது, சிகரெட் தவிர்க்கப்பட வேண்டும். அன்றாட தேவைகளுக்கு மட்டுமே மருந்து கலவை தயாரிக்க வேண்டும். மருந்துகளை மீதம் வைக்கக் கூடாது. வெப்பச்சலனத்தை கருத்தில் கொண்டு கருப்பு மணி, கலர் மணி உலர்த்துதலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் சரியாகவும், சுய கட்டுப்பாட்டுடனும் பின்பற்றப்பட்டால் வெடி விபத்துகளை தவிர்க்கலாம். வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் பலமுறை பட்டாசு விபத்து தடுப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதையும் மீறி வெடி விபத்துகள் நடைபெறுவது வேதனைக்குரியது.

இனி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர், பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் போது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story