காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் 101 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாநில தலைவர் ரபீக்அகமது, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் காஜாமொய்தீன், மாநில செயலாளர் தினகராஜன், மாதர்சங்க மாநில தலைவர் ஜீவாமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் ரெயில் மறியல் செய்வதற்காக திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன்எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் அங்கேயே உச்சநீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கபட நாடகமாடும் மத்திய அரசை கண்டிப்பது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல்கேஸ், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், பெட்ரோலிய மண்டலம் போன்ற நச்சு திட்டங்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story