திருவாடானை தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், காங்கிரஸ் கட்சி மனு


திருவாடானை தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், காங்கிரஸ் கட்சி மனு
x
தினத்தந்தி 9 April 2018 3:15 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அஞ்சல் நிலையத்தில் ரெயில் முன்பதிவு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோடனூர் கணேசன், வட்டார தலைவர் துரைஜெயபாண்டி, நகர் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அஞ்சல் துறையுடன் இணைந்து ரெயில் முன்பதிவு சேவை மையத்தை தொடங்கி செயல்படுத்தி வந்தது.

இதனால் தாலுகா தலைநகரான திருவாடானைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இங்குள்ள தபால் நிலையத்தில் தட்கல் முறையில் ரெயில் பயண முன்பதிவு செய்தால் நிச்சயம் தங்களுக்கான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர். எத்தனையோ இடங்களில் இன்டர்நெட் மையங்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் ரெயில் முன்பதிவு செய்யும் சேவைகள் இருந்தபோதும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திருவாடானை தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த சேவை மையம் இருந்து வந்தது.

ஆனால் இங்கு தென்னக ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்த்தபடி அதிகஅளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெறாமலும், வணிக ரீதியாக போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை எனவும் திருவாடானை தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த ரெயில் முன்பதிவு சேவையை தென்னக ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. அதனைதொடர்ந்து இந்த தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு ரெயில் முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். எனவே திருவாடானை தபால் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில் முன்பதிவு சேவையை தென்னக ரெயில்வே நிர்வாகம் மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story