தரமணியில் தனியார் தொழில்நுட்ப பூங்கா அமைக்க மரங்கள் வெட்டப்பட்டதால் சாலைக்கு வரும் மான்கள்


தரமணியில் தனியார் தொழில்நுட்ப பூங்கா அமைக்க மரங்கள் வெட்டப்பட்டதால் சாலைக்கு வரும் மான்கள்
x
தினத்தந்தி 9 April 2018 3:45 AM IST (Updated: 9 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தரமணியில் தனியார் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காடு போன்று அடர்ந்து காணப்பட்ட பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதால் மான்கள் இரைதேடி சாலைக்கு வருகின்றன. இதையடுத்து 3 மான்கள் பிடிக்கப்பட்டு கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிர்புறம் சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்ந்து காணப்பட்டது. இதனால் அருகில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறும் மான்கள், காடு போன்ற இந்த பகுதிக்குள் சென்று இரைதேடி விட்டு, அங்கேயே தங்கிவிட்டு செல்லும்.

இந்த நிலையில் தனியார் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக கட்டுமான பணிக்காக அங்கு இருந்த மரங்களை வெட்டியதுடன், செடி, கொடிகளையும் வேரோடு அகற்றப்பட்டு உள்ளது. இதனால் காடுபோல் இருந்த அந்த பகுதி தற்போது திறந்தவெளி நிலமாக மாறிவிட்டது.

இதனால் கவர்னர் மாளிகையில் இருந்து இரைதேடி வெளியேறும் மான்கள், மரங்கள் வெட்டப்பட்டு திறந்தவெளியாக இருப்பதால் தரமணி சாலையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இரவு நேரங்களில் உணவை தேடி வெளியே வரும் மான்கள் கூட்டம், சாலையோர கடைகள் முன்பு உணவுக்காக காத்து நிற்கின்றன.

சாலையோர கடைகளில் உணவு சாப்பிட வருபவர்கள், மான்கள் மீது பரிதாபப்பட்டு அவற்றுக்கும் உணவு வழங்கி வருகின்றனர். சிலநேரங்களில் மான்கள் சாலைக்கு ஓடி வரும்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறக்க நேரிடும் நிலை காணப்படுகிறது. அந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதால் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கிண்டி வனத்துறை அதிகாரி முருகேசன் தலைமையில் வனத்துறையினர் கவர்னர் மாளிகையில் இருந்து மான்கள் வெளியேறாத வகையில் அந்த பாதைகளில் வலைகள் கொண்டு அடைத்து உள்ளனர்.

மேலும் அதையும் மீறி இரை தேடி வெளியே வரும் மான்களுக்கு தேவையான புற்கள், தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த மான்கள் சாலைக்கு சென்று விடாமல் தடுக்க சாலையோரம் வலைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தடுப்புகளை மீறி வெளியேறும் மான்களை பிடித்து கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 மான்கள் பிடிக்கப்பட்டு கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story