கொடைரோடு சுங்கவரி மையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


கொடைரோடு சுங்கவரி மையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு சுங்கவரி மையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கொடைரோடு சுங்கவரி மையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதி செயலாளர் ஜெயசுந்தர் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில்முருகன் மற்றும் சின்னமாயன், பரணி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுங்கவரி மையத்தின் வழித்தடங்களில் உள்ள கம்பியிலான தடுப்புகளை விலக்கி விட்டு வாகனங்களை கட்டணம் செலுத்தாமல் செல்ல வலியுறுத்தினர். அப்போது போலீசார் மீது அந்த தடுப்பு கம்பி விழுந்தது. அப்போது வழித்தடங்களில் முற்றுகையிட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதையொட்டி திண்டுக்கல் தொகுதி செயலாளர் ஜெயசுந்தர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக திண்டுக்கல் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 60–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதேபோன்று பழனி குளத்துரோடு ரவுண்டானா அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் நகர தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story