பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன செவலை பசுக்கள், கன்றுகள் விற்பனை


பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன செவலை பசுக்கள், கன்றுகள் விற்பனை
x
தினத்தந்தி 9 April 2018 4:00 AM IST (Updated: 9 April 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன செவலை பசுமாடுகள், கன்றுகள் விற்பனை நடைபெற்றது.

முத்தூர், 

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ்பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், மயிலை பூச்சிகாளைகள், மயிலைமாடுகள், மயிலைகிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கேயம் இன நாட்டு மாடுகள், கன்றுகள், காளைகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சந்தையில் நேற்றும் காங்கேயம் இன கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் கலந்துகொண்டனர். இதனால் காங்கேயம் இன காளைகள், மாடுகள்பார்வையிடுதல், விற்பனை வழக்கம்போல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன்படி இந்த சந்தையில் நேற்று மொத்தம் 181 காங்கேயம் இன காளைகள், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தம் 85 நாட்டு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்திற்கு 9 மாத சினையுடன் காங்கேயம் இன செவலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் சந்தையில் முத்தூர்- மூத்தாம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர். தமிழ்ச்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 12 காங்கேயம் இன பசுக்களுக்கு சினை பரிசோதனைசெய்தனர். மேலும் சந்தையில் கால்நடை உபகரணங்களான திருகாணி, தலைகயிறு, மூக்கணாங்கயிறு, கொம்புகயிறு, கால்நடை தீவனம் அறுக்கும் எந்திரம், கலர் கலரான நரம்பு கயிறுகள், மாடுகட்டும் இரும்பு கம்பி, தும்பு, சாட்டை ஆகிய பொருட்களின் விற்பனையும் வழக்கத்தைவிட செவலை பசுமாடுகள், கன்றுகள் விற்பனையும் நடைபெற்றது.

மேலும் சந்தையில் ரூ.1லட்சத்துக்கு மேல் 5 மாடுகளும், ரூ. 35 ஆயிரத்திற்கு மேல் மொத்தம் ரூ.7 லட்சத்துக்கு 20 கன்றுகள், கிடாரி கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story