செயின்பறிப்பு சம்பவங்களை தடுக்க 34 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


செயின்பறிப்பு சம்பவங்களை தடுக்க 34 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 April 2018 3:30 AM IST (Updated: 9 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 34 கண்காணிப்புக்குழுக்களை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

தமிழ்நாட்டில் தற்போது நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிடுகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒருமாதத்திற்கு முன்பு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சுகாதார ஆய்வாளர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்தபோது கீழேவிழுந்து இறந்துவிட்டார்.

அதேபோன்று வடமாநிலத்தை சேர்ந்த சிலர் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாகக்கூறி பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்யும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் போலீசில் சிக்காமல் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார்கள்.

எனவே, செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்காணிக்க தனிகுழுக்களை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 34 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story