தென்காசியில் உலக கின்னஸ் சாதனைக்காக 991 மாணவர்கள் ஒரே இடத்தில் வர்ணம் தீட்டி சாதனை
தென்காசியில், உலக கின்னஸ் சாதனைக்காக 991 மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் வர்ணம் தீட்டி சாதனை நிகழ்த்தினர்.
தென்காசி,
தென்காசி பரதாலயா கல்சுரல் அகாடமி சார்பில் உலக கின்னஸ் சாதனைக்காக 1 லட்சம் சதுர அடி பரப்பில் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று காலை முதல் மாலை வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை பைன் ஆர்ட்ஸ் அரசு கல்லூரி முதல்வர் சந்திர சேகரன் தலைமை தாங்கினார். கோவை ஆர்ட் பவுண்டேசன் தலைவர் ரவி ராஜ் முன்னிலை வகித்தார். செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் புதிய பாஸ்கர், செயிண்ட் ஜோசப் கல்லூரி போஸ்கோ குணசீலன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளை சேர்ந்த 991-மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினர். திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, அந்த நிறுவன ஓவிய ஆசிரியை ஜெயபார்வதி, கராத்தே மாஸ்டர் சண்முக சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பரதாலயா கல்சுரல் அகாடமி நிர்வாக இயக்குநர் செல்வ விநாயகம், இயக்குநர் கல்பனா, பயிற்சியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story