ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 3:30 AM IST (Updated: 10 April 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிட திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி என்ஜினீயர், வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஊராட்சி செயலாளர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம், ஊராட்சி செயலாளர்கள் நலச்சங்கம் மற்றும் பணி மேற்பார்வையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது:- சூலூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிட திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தவறுதலாக வட்டார வளர்ச்சி அலுவலர், என்ஜினீயர், பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவையில் நடந்த திட்ட அலுவலர் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புறக்கணித்தனர். அதை தொடர்ந்து தற்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இன்று (நேற்று) மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக குடிநீர் வினியோகம் மற்றும் ஒன்றியம் சம்பந்தப்பட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story