‘நீட்’ தேர்வு எழுதும் 396 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி


‘நீட்’ தேர்வு எழுதும் 396 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ‘நீட்‘ தேர்வு எழுதும் 396 அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் ‘நீட்’ தேர்்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 396 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி பள்ளிக்கல்வி துறையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 22 பள்ளிகளில் ‘நீட்‘ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பயிற்சி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கனவே உள்ளது. போக்குவரத்து வசதி மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 396 மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ‘நீட்‘ பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கு உதவும் வகையில் அரசின் இலவச மடிக்கணினி மற்றும் பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் நமது மாவட்ட மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெறும் ‘நீட்‘ தேர்வில் பங்கேற்று அதிக அளவில் மதிப்பெண்களை பெற்று இட ஒதுக்கீடு பெற வேண்டும். தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளது. உங்களது குறிக்கோள்களை நிறைவேற்றிட கடினமாக உழைக்க வேண்டும். எனவே பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னத்துரை (நெல்லை). ஜெயராஜ் (சேரன்மாதேவி), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன், அழகுராஜன் மற்றும் அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story