ஸ்டெர்லைட் விளம்பர பலகை அகற்றம்


ஸ்டெர்லைட் விளம்பர பலகை அகற்றம்
x
தினத்தந்தி 10 April 2018 5:00 AM IST (Updated: 10 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஸ்டெர்லைட் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், தபால் தந்தி காலனி, 3-வது மைல், சில்வர்புரம், கோரம்பள்ளம் ஆகிய 10 இடங்களில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று அ.குமரெட்டியபுரம் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதேபோன்று திராவிடர் கழகத்தை சேர்ந்த பெரியாரடியான் மற்றும் கழகத்தை சேர்ந்தவர்கள் அ.குமரெட்டியபுரம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆங்காங்கே உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களை பராமரிக்கும் பணியை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ஸ்டெர்லைட் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விளம்பர பலகைகள் அனைத்தும் நேற்று மாலையில் முற்றிலும் அகற்றப்பட்டன.

Next Story