காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வேளச்சேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வேளச்சேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 300 தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தென்சென்னை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன் தலைமையில் தே.மு.தி.க.வை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் வேளச்சேரி விஜயநகரில் இருந்து ஊர்வலமாக வந்தனர். ரெயில் நிலையத்திற்குள் யாரும் நுழைந்துவிடாதபடி போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் மறியல்
தே.மு.தி.க.வினர் அந்த தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கடற்கரை நோக்கி புறப்பட தயாராக இருந்த பறக்கும் ரெயில் முன் அமர்ந்தும், என்ஜின் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வந்த ரெயிலையும் மறித்தனர்.
உடனே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை வேன்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் பறக்கும் ரெயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story