திரு.வி.க.நகரில் உள்ள பல்லவன் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திரு.வி.க.நகர்,
சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தில் இருந்து பிருந்தா தியேட்டர் செல்லும் வழியில் பல்லவன் சாலை உள்ளது. நேற்று மதியம் இந்த சாலையின் நடுப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சுந்தரராஜன், மாநகராட்சி குடிநீர் வாரிய திரு.வி.க.நகர் பகுதி செயற்பொறியாளர் பாபு மற்றும் மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேரம் ஆக ஆக பள்ளத்தின் ஆழம் அதிகரித்து சுரங்கம்போல் சென்றது. இதனால் பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து மாநகராட்சி குடிநீர் வாரிய பகுதி செயற்பொறியாளர் பாபு கூறியதாவது:-
மண்அரிப்பு
பாதாள சாக்கடை குழாயில் லேசாக உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வெளியேறி மண்அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அப்போது இரண்டு ‘மேன்ஹோல்’களுக்கு இடையே உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம். தகவல் கிடைத்தவுடன் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்படும். சாலை சீரமைக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story