காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் சாவு


காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் சாவு
x
தினத்தந்தி 10 April 2018 4:41 AM IST (Updated: 10 April 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

மலவள்ளி அருகே முத்தத்தியில் காவிரி ஆற்றில் மூழ்கி மங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் செத்தார்.

ஹலகூர்,

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முத்தத்தியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து நண்பர்கள் 13 பேர் ஒரு சொகுசு வேனில் முத்தத்திக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

அவர்கள் வரும் வழியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள கெம்பாலம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் முத்தத்திற்கு வந்துள்ளனர். அங்கு காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை பார்த்த 13 பேரும் குளிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் ஒருவர் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் நீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹலகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீச்சல் வீரர்கள் உதவியுடன் பலியானவரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பலியானவர் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த பிரதாப் ஷெட்டி என்பவரின் மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர் பெங்களூருவை சேர்ந்த தனது நண்பர்களுடன் முத்தத்திக்கு சுற்றுலா வந்ததும், அந்த சமயத்தில் ஆற்றில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story