முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் சித்தராமையா முன்னணியில் உள்ளார்


முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் சித்தராமையா முன்னணியில் உள்ளார்
x
தினத்தந்தி 10 April 2018 5:15 AM IST (Updated: 10 April 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் சித்தராமையா முன்னணியில் உள்ளார் என்று காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை. அமித்ஷா தான் தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரம் செய்வதை நிறுத்தியது ஏன்?. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், இந்த சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது. அவர் தான் காங்கிரசின் முகம். அவர் தான் எங்கள் அணியின் தலைவர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்-மந்திரி யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும். புதிதாக தேர்ந்து எடுக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரியை தேர்ந்து எடுப்பார்கள். ஆனால் சித்தராமையா தான் எங்களின் தலைவர். அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் சித்தராமையாவே முன்னணியில் உள்ளார்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அதை விட அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஏனென்றால், காங்கிரசின் 5 ஆண்டுகால செயல்பாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் மத்திய பா.ஜனதா ஆட்சியின் தவறான செயல்பாடுகளால் அக்கட்சி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

எங்கள் கட்சியில் டிக்கெட் கொடுக்கும் பணி சரியான முறையில் நடைபெற வேண்டும். அந்த திசையில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். தகுதியானவர்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும். அது சரியாக நடைபெற்றுவிட்டால் எங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

1985-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே கட்சி தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றது இல்லை. இதற்கு கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகள் தான் காரணம். ஆனால் இந்த முறை காங்கிரசில் அத்தகைய எந்த பிரிவினையும் ஏற்படவில்லை. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். நாங்கள் நிலையான மற்றும் சிறப்பான ஆட்சியை நடத்தி இருக்கிறோம்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். மோடி அலை என்பது குறைந்துவிட்டது. மத்தியில் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடி கடந்த 1½ மாதமாக கர்நாடகத்திற்கு வரவில்லை. அவரது பயண திட்டத்தையும் ரத்து செய்துவிட்டனர்.

அவர் எதற்காக பயணத்தை ரத்து செய்தார்?. கர்நாடகத்திற்கு வராமல் இருப்பது ஏன்?. அமித்ஷா மட்டுமே ஏன் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்?. கர்நாடகத்தில் வெற்றி பெற முடியாது என்று மோடிக்கே பயம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அமித்ஷா கர்நாடகத்தில் அடிக்கடி வந்து பிரசாரம் செய்தபோதும், அது எந்த தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. அமித்ஷா காங்கிரசுக்கு நட்சத்திர பேச்சாளராக திகழ்கிறார் என்றே நான் கருதுகிறேன். அமித்ஷா என்ன செய்தாலும் அது காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது.

மாநிலத்தில் தங்களை மதசார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பார்கள். தங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு தெரியும். அதனால் அந்த கட்சிகள் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைப்பதை தடுக்க முயற்சி செய்கின்றன.

ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் நாங்கள் கடந்த காலத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஆனால் அந்த கட்சி நம்பகமாக நடந்து கொள்வது இல்லை. அந்த கட்சிக்கு எந்த கொள்கையும் இல்லை. அவர்களை நம்பி எப்படி திட்டமிடுவது?. மடங்கள், கோவில்களுக்கு ராகுல் காந்தி செல்வதை பா.ஜனதா குறை கூறுகிறது. கடந்த காலங்களிலும் அவர் கோவில்களுக்கு சென்றார்.

அரசியல் ஆதாயம் பெற மடாதிபதிகளின் கூட்டத்தை அமித்ஷா நடத்துகிறார். லிங்காயத் மக்களுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. கட்சியில் பிரச்சினைகள் என்பது எழும். இது சகஜமானது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story