இன்று உலக ஓமியோபதி தினம்


இன்று உலக ஓமியோபதி தினம்
x
தினத்தந்தி 10 April 2018 1:29 PM IST (Updated: 10 April 2018 1:29 PM IST)
t-max-icont-min-icon

ஓமியோபதி மருத்துவத்தை கண்டு பிடித்த ஜெர்மன் நாட்டு மருத்துவர் சாமுவேல் ஹானிமோன் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி படித்தவர்.

அலோபதி மருத்துவ முறையின் உதவியால் நோயாளிகளை முழுமையாக நோயிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அதே நேரம் உட்கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள், பின் விளைவுகளை கண்டு வெகுண்ட, ஹானிமோன் மருத்துவத்தொழிலையே வெறுத்து போய் அதை விட்டு விலகி புத்தகங்களை மொழிப்பெயர்க்கும் தொழிலை செய்து வந்தார்.

அப்போது கலன் என்னும் மருத்துவர் எழுதிய ‘மெட்டிரியா மெடிக்கா’ என்னும் புத்தகத்தை மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சின்கோனா மரபட்டைகள் மலேரியா காய்ச்சலை குணமாக்கும் என்ற வாசகம் அவரைக் கவர்ந்தது. அதன் அடிக்குறிப்பில் ஏனென்றால் அதில் உள்ள ‘கசப்புத்தன்மை’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் ஹானிமோனை சிந்திக்க வைத்தது. உலகில் கசப்புத்தன்மை கொண்ட மூலிகைகள் பொருள்கள் ஏராளமாக இருக்கும் போது எப்படி சின்கோனாவுக்கு மட்டும் இப்படி குணமாக்கும் தன்மை இருக்க முடியும்? கசப்புத்தன்மை தாண்டிய தனித்துவம் ஏதோ ஒன்று நிச்சயம் வேண்டும் என்ற எண்ணம் அவரை அந்த மரப்பட்டை சாறைக்குடிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஹானிமோனிற்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரிந்தது. எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதனைக் கொண்டு ‘லைகாஸ்கேர்லைகாஸ்’ என்ற தத்துவத்தினை உருவாக்கினார். எளிமையாகச்சொன்னால் ‘முள்ளை முள்ளால் எடுக்க முடியும்’ என்பது தான் அது.

தனக்கு வந்த மலேரியா காய்ச்சலை குணமாக்க அதிக அளவில் சின்கோனா மரப்பட்டை சாறை குடித்தார். நோயும் முழுமையாக குணமானது. விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு ‘ஓமியோபதி’ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

நோயை உருவாக்கும் தன்மையை உடைய பொருட்களையே மருந்தாக கொடுப்பது ஓமியோபதி மருத்துவத்துக்குரிய சிறப்பு.

-டாக்டர்.வீ.மு.சசிகுமார்(ஆயுஷ்)

Next Story