ரத்த நாளம் கொண்ட ‘மினி’ மனித மூளைகள்!


ரத்த நாளம் கொண்ட ‘மினி’ மனித மூளைகள்!
x
தினத்தந்தி 10 April 2018 2:56 PM IST (Updated: 10 April 2018 2:56 PM IST)
t-max-icont-min-icon

‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று பாடினார் தமிழின் பழம்பெரும் ஆகம நூல்களில் ஒன்றான திருமந்திரத்தை அருளிய திருமூலர்.

யோகம், ஆசனங்கள், தியானம் மற்றும் உடலைக் பேணிக் காக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்கங் களைக் கொண்டது திருமந்திரம். உடலை ஏன் பேணிக் காக்க வேண்டும் என்பதற்கான சான்றாகவே உள்ளது உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே எனும் திருமூலரின் பிரபல செய்யுள் வரிகள்.

அதாவது, உடலை பாதுகாத்து வளர்த்தால் உயிருடன் இருக்க முடியும் என்பதே இந்த செய்யுள் முன்வைக்கும் கருத்து. மனித உடல் பாகங்களின் ஆரோக்கியம் மனித உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். உடல் பாகங்கள் பழுதுபட்டால் உடலைவிட்டு உயிர் மெல்ல மெல்ல நீங்கிவிடும்.

ஆனால், உடல் பாகங்கள் அனைத்தையும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களோ பாதிக்கும் பின்னர் பழுதடையச் செய்யும். மனித உடல் பாகங்கள் பலவற்றையும் பாதிக்கும் பலவகையான நோய்கள் இருப்பதுபோல, மனித உடலின் பாகங்கள் அனைத்தையும் கட்டுப் படுத்தும் திறன்கொண்ட மூளையும் புற்றுநோய், ஸ்ட்ரோக், டிமென்சியா, அல்செய்மர்ஸ், ஸ்கீசோப்ரீனியா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகி பழுதடைந்து பின்னர் செயலிழந்தும் போகிறது.

மனித உடலின் செயல்பாட்டுக்கு இன்றியமையாத உடல் பாகமான மனித மூளையை நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், அதனை பாதிக்கும் நோய்களால் மூளையில் எந்தவிதமான உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு, உயிருள்ள, செயல்படுகின்ற ஒரு மனித மூளையை அதனை பாதிக்கக்கூடிய காரணிகள் மூலமாக தூண்டிவிட்டு, பாதிப்புகளை ஏற்படுத்தி தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சட்ட திட்டங்கள், அறிவியல் ஆய்வு வரையறைகள் உள்ளிட்ட பல சிக்கல்களால் அத்தகைய ஒரு வாய்ப்பு அறிவியல் ஆய்வாளர்களுக்கு கிடைப்பது மிகவும் அரிது, இதுவரை கிடைக்கவும் இல்லை. அதேநேரத்தில், மனித ஸ்டெம் செல்களை சோதனைக்கூடத்தில் வளர்த்து, அதிலிருந்து மிகச்சிறிய பந்துகள் அளவுகொண்ட மிகச்சிறிய மூளை (Minibrain) ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மினி மூளைகளில் ரத்த நாளங்கள் இல்லாத காரணத்தால், ரத்தம் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை இல்லாமல், அந்த மினி மூளைகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலைக்கு மேலே வளர முடியாமல் இறந்துபோயின.

தற்போது, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வில், ஒரு நோயாளியின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்களில் இருந்து மினி மூளையையும், அதனைச் சுற்றி பரவி வளரும் திறன்கொண்ட ரத்த நாளங்களையும் சோதனைக்கூடத்தில் வளர்த் தெடுத்து அசத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் சுமார் 3 முதல் 5 வாரங்கள் வரை சோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட மினி மூளைகள், அதனைத்தொடர்ந்து மேலும் சுமார் 2 வாரங்கள் வரை ஒரு எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக வளர்க்கப்பட்டன.

சோதனைக்கூட காலம் மற்றும் எலியின் உடலுக்குள் வளர்ந்த காலம் என இரண்டு காலக்கட்டத்திலும் மினி மூளையைச் சுற்றி ரத்த நாளங்களின் ஆதார உயிரணுக்களான எண்டோதீலியல் செல்களில் இருந்து தொடர்ச்சியாக ரத்த நாளங்கள் மற்றும் நுண் நாளங் களுடன் வளர்ந்தது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரிதான், இந்த மினி மூளைகள் இயற்கையான மனித மூளையின் மினி வெர்ஷனா என்ன? என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் உண்மை.

பெயருக்கேற்றார் போல இந்த மினி மூளைகள் அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும்கூட, மூளை தொடர்பான அறிவியல் ஆய்வுகளைப் பொருத்தவரை இவை ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போல, அளவில் மிகச்சிறிய மினி மூளைகள் சிக்கலான பல மூளைக்குறைபாடுகள் தொடர்பான மிகப்பெரிய மற்றும் முக்கியமான அறிவியல் உண்மை களைக் கண்டறிய உதவும் என்கிறார்கள் நரம்பியல் ஆய்வாளர்கள்.

Next Story