தாராபுரம் அமராவதி ஆற்றில் தலை விரித்தாடும் மணல் திருட்டு


தாராபுரம் அமராவதி ஆற்றில் தலை விரித்தாடும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 11 April 2018 4:46 AM IST (Updated: 11 April 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அமராவதி ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுப்பது எப்போது என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறைக்கு உள்ள பெரிய பிரச்சினையே அமராவதி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டுதான். மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறையின் உயர் அதிகாரிகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மணல் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளன. மணல் திருட்டுக்கு யார் காரணம்? என்கிற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் பகிரங்கமாக பட்டப்பகலில் நகரின் மையப்பகுதியில் மணல் விற்பனை நடைபெறுகிறது.

எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் மணல் திருட்டு எப்படி அதிகாரிகளுக்கு உடனே தெரிகிறது? யார் அதிகாரிகளுக்கு தகவல்களை தருகிறார்கள் என்கிற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. தற்போது அதுவும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அதாவது மணல் திருடுபவர்களை கண்காணிப்பதையே இங்கு சிலர் தொழிலாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மணல் திருடர்களை நேரில் சந்தித்து மிரட்டி பணம் கேட்கிறார்கள். தரமறுத்தால் உடனே அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்துவிடுவார்கள். மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் இருக்க சிலருக்கு சமூக விரோதிகள் லஞ்சம் வழங்குகிறார்கள். அதனால் அதிகாரிகள் மணல் திருட்டை கண்டுகொள்வதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதற்காக மணல் திருட்டு விஷயத்தில் அனைத்து அதிகாரிகளும் தவறு செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. மணல் திருட்டை தடுப்பதற்காக, இரவு-பகல் பாராமல் உயிரை துச்சமென நினைத்து, வாகனச் சோதனைகளை நடத்தி, பல மிரட்டல்களுக்கு இடையே மணல் திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருந்தும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லையே என்கிற கவலை விவசாயிகளுக்கு இருந்து வருகிறது.

அமராவதி ஆறு தாராபுரம் தாலுகாவில் காங்கேயம்பாளையத்தில் இருந்து நஞ்சைத்தலையூர் வரை சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ளது. இவ்வளவு நீண்ட தூரம் அமராவதி ஆறு இருப்பதால், சமூக விரோதிகள் அதிகாரிகளை எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள். உதாரணத்திற்கு வருவாய்த்துறை அதிகாரி 10 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே உள்ள அலங்கியம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக தகவல் அறிந்து தடுக்கச்சென்றால், சமூக விரோதிகள் 30 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கே உள்ள மூலனூர் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவார்கள். அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்க நினைத்து வாகனத்தில் புறப்பட்டாலே போதும். உடனே செல்போன் மூலம் சமூகவிரோதிகளுக்கு தகவல் சென்றுவிடும்.

அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லும் வாகனத்தை பிடித்தால் அதை விடச்சொல்லி பல இடங்களில் இருந்தும் சிபாரிசுகள் வரும். அதன் பிறகு அதிகாரிகளால் என்ன செய்ய முடியும். அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் மூழ்கிவிட்டது. இதனால் அமராவதி ஆற்றின் கரைகள் தற்போது பாதுகாப்பாக இல்லை.

எந்த வாகனமாக இருந்தாலும் சரி ஆற்றில் எங்குவேண்டுமென்றாலும் எளிதாக இறங்க முடியும். எந்திரங்களைக் கொண்டு சில வினாடிகளில் பல யூனிட் மணலை திருடி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முடியும். மணல் ஏற்றிய வாகனங்கள் கரைக்கு வந்துவிட்டால், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற நிலைமை இருந்து வருகிறது.

அமராவதியின் நிலைமை இப்படி இருக்க தலைவிரித்து ஆடும் மணல் திருட்டை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது உண்மைதான். எனவே இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டுகளை தடுப்பது எப்போது என்பது சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story