பா.ஜனதாவில் மகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி மீண்டும் காங்கிரசுக்கே திரும்புகிறார், எஸ்.எம்.கிருஷ்ணா


பா.ஜனதாவில் மகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி மீண்டும் காங்கிரசுக்கே திரும்புகிறார், எஸ்.எம்.கிருஷ்ணா
x
தினத்தந்தி 11 April 2018 5:11 AM IST (Updated: 11 April 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் தனது மகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா மீண்டும் காங்கிரசுக்கே திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

பா.ஜனதாவில் தனது மகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா மீண்டும் காங்கிரசுக்கே திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரி பதவி பறிப்பு

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். ஆனால் ஆட்சி காலம் முடியும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட மத்திய மந்திரி பதவியை காங்கிரஸ் பறித்தது. அதற்கு அக்கட்சி மேலிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை.

இதனால் டெல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு திரும்பினார். கர்நாடகத்திற்கு வந்த பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார். கர்நாடக காங்கிரசில் தனக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் காங்கிரஸ் மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருந்தார்.

உரிய மதிப்பு இல்லை

இந்த நிலையில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை அவர் கடந்த ஆண்டு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார். காங்கிரசின் குடும்ப அரசியலையும் அவர் குறை கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சிக்கவில்லை.

இந்த நிலையில் சுமார் 85 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இதனால் தங்களுக்கு பெரிய பலம் கிடைத்ததாக கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர். மைசூரு மண்டலத்தில் ஒக்கலிகர் சமூக மக்களின் ஆதரவை பெற முடியும் என்று அக்கட்சி கருதியது. அதேபோல் பா.ஜனதாவில் தனது அனுபவத்திற்கு ஏற்ற பதவி கிடைக்கும் என்று எஸ்.எம்.கிருஷ்ணாவும் நம்பினார். ஆனால் அங்கும் அவருக்கு அதே நிலை தான் ஏற்பட்டது.

பா.ஜனதா ஓரங்கட்டியது

கட்சியில் சேர்ந்த பிறகு அவரை பா.ஜனதா தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுவும் அவரை அதிருப்தி அடைய செய்தது. பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேண்டா வெறுப்பாக அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரு சில நாட்கள் மட்டும் பிரசாரம் செய்தார். அதன் பிறகு மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பிவிட்டார். கட்சியில் சேர்ந்தது முதலே அவரை பா.ஜனதா ஓரங்கட்டிவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவில் தனது மகளுக்கு டிக்கெட் வழங்குமாறு எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அக்கட்சி பரிசீலிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பா.ஜனதா மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பிவிடலாம் என்று சிந்திக்க தொடங்கி இருக்கிறார்.

காங்கிரசுக்கு திரும்புகிறார்

இதையடுத்து ராகுல் காந்தியின் அனுமதியை பெற்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், தேர்தல் பிரசார குழு தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஒரு சுற்று பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாகவும், அப்போது காங்கிரசுக்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுப்பதாக அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக எஸ்.எம்.கிருஷ்ணா மீண்டும் காங்கிரசுக்கு திரும்புகிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இதை எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செய்திகள் வெளியாவது சகஜமானது தான். இதை யாரும் நம்ப தேவை இல்லை. யாரோ சிலர் திட்டமிட்டே வதந்திகளை பரப்புகிறார்கள்“ என்றார்.

Next Story