சமரச மையங்களால் நிலுவை வழக்குகள் குறைந்துள்ளன தலைமை நீதிபதி பேச்சு


சமரச மையங்களால் நிலுவை வழக்குகள் குறைந்துள்ளன தலைமை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 11 April 2018 5:20 AM IST (Updated: 11 April 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

சமரச மையங்களால் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் உள்ள தமிழ்நாடு சமரச மையத்தின் 14-ம் ஆண்டு விழாவையொட்டி சமரச மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் சமரச நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிக்குமார், பொன்.கலையரசன், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ஐகோர்ட்டு சமரச மைய இயக்குனர் பி.முருகன், துணை பதிவாளர் சுமதி, உதவி பதிவாளர் ரமா உள்பட பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு முகாமை தொடங்கிவைத்து, துண்டு பிரசுரங்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட்டார். அதனை மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசியதாவது.

இந்தியாவில் முதன்முறையாக மாநில சமரச மையம் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் தான் தொடங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்துவந்த பல வழக்குகள், தமிழகம் முழுவதும் உள்ள சமரச மையங்கள் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்கு களின் எண்ணிக்கை குறைகிறது. வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதே இந்த சமரச மையத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக ஐகோர்ட்டில் பயிற்சி பெற்ற 161 வக்கீல்களும், 974 பயிற்றுனர்களும் உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளும் பிரத்யேக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story