லாரியை கடத்திய வழக்கில் வாலிபர் போலீசில் சரண்


லாரியை கடத்திய வழக்கில் வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 11 April 2018 5:38 AM IST (Updated: 11 April 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

கவரைப்பேட்டை அருகே டிரைவரை தாக்கி இரும்பு பொருட் களுடன்லாரி கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர் மணிகண்டன் (வயது 38) என்பவரை கடந்த மாதம் 4-ந்தேதி உருட்டுக் கட்டையால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களுடன் லாரியை மர்ம கும்பல் கடத்திச்சென்றது. மேற்கண்ட 5 பேர் கொண்ட கடத்தல் கும்பல் தொடர்ந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவில் டிரைவர்களை தாக்கி கார்களை கடத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

வெங்கல், பொன்னேரி, ஆகிய பகுதிகளில் கார் கடத்தல், இரும்பு, அலுமினிய பொருட்கள் திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடைய இந்த கும்பலை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் 13-ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கடத்தப்பட்ட மினி லாரியை மட்டும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மீட்டனர். மேலும் தனிப்படை போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், வாகன கடத்தல் கும்பலை சேர்ந்த சோழவரம் பெரிய காலனியை சேர்ந்த கார்த்திக்(22), அருண்(22), பிரசாந்த்(20) மற்றும் மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன்(23) ஆகிய 4 பேரை ஏற்கனவே கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களையும், பதிவு எண்ணை மாற்றி அவர்கள் பயன்படுத்தி வந்த கடத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சோழவரம் பெரியகாலனியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பவர் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Next Story