பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 5:44 AM IST (Updated: 11 April 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தின்போது பன்றியை பாஸ்போர்ட் அலுவலகத்துக்குள்விட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருப்பதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி புதுவையில் பழங்குடியின விடுதலை இயக்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து இயக்கத்தின் தலைவர் ஏகாம்பரம் தலைமையில் நிர்வாகிகளும், இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் பாஸ்போர்ட் அலுவலகத்தை வந்தடைந்ததும் அவர்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அலுவலக வாசலில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், முன்னவன், செல்வநந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திடீரென சிலர் பாஸ்போர்ட் அலுவலக சுவர் மேல் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அவர்கள் சாக்குப்பையில் மறைத்து வைத்திருந்த பன்றியை பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள்விட முயன்றனர். ஆனால் அதை போலீசார் தடுத்துவிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

கைதான அனைவரும் சிறிதுநேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story