பொய்யான தகவல்களை நாராயணசாமி பரப்புகிறார் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


பொய்யான தகவல்களை நாராயணசாமி பரப்புகிறார் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 April 2018 5:58 AM IST (Updated: 11 April 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பிரச்சினைகளில் நேரத்துக்கு நேரம் மாறி மாறி பொய்யான தகவல்களை நாராயணசாமி பரப்புகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.

புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு பிரச்சினைகளில் இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் மாறிமாறி பொய்யான தகவல்களை கூறி வருகிறார். மறைந்த ஜெயலலிதாவின் நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் காவிரி பிரச்சினை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விஷயத்தில் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்த காங்கிரஸ், தி.மு.க.வினர் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினை அமல்படுத்த முடியாத மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடியாத முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு தமிழக அரசைப்பற்றி குறைகூற அருகதை இல்லை. அவர் தமிழக அரசு குறித்து தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு இப்போது சுப்ரீம்கோர்ட்டில் வந்தபோது தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் கோர்ட்டில் இருந்தனர். ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினைக்காக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் காவிரி பிரச்சினைக்காக கோர்ட்டுக்கு செல்லவில்லை.

முதல்-அமைச்சர் நாரா யணசாமி கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்துகொண்டு காரைக்கால் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார். அதை மறைக்க ஒருவார காலமாக புதுவையை போராட்ட களமாக மாற்றி வருகிறார். மக்கள் விரோத அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு மக்களை பாதிக்கும் விதமாக பல போராட்டங்களை தூண்டிவிடுகிறார்.

ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி ஆசை வந்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார். தேர்தலிலேயே போட்டியிடாமல் முதல்-அமைச்சரான இவருக்கு ஆசை இருக்கும்போது தேர்தலில் போட்டியிட்டு 8 எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி தலைவருக்கு அந்த ஆசை இருக்காதா? தேர்தல் அறிவிப்புகளைக்கூட நிறைவேற்றாத முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story