கொடுமைப்படுத்துவதாக கூறி மத பாடசாலையில் இருந்து வெளியேறிய 2 இளம்பெண்கள், கிராம மக்கள் சாலை மறியல்


கொடுமைப்படுத்துவதாக கூறி மத பாடசாலையில் இருந்து வெளியேறிய 2 இளம்பெண்கள், கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 April 2018 6:30 AM IST (Updated: 11 April 2018 6:12 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே, கொடுமைப்படுத்துவதாக கூறி மத பாடசாலையில் இருந்து 2 இளம்பெண்கள் வெளியேறினர். பாடசாலை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்,

பெரியகுளம் தென்கரை பாரதிநகரில் மத பாடசாலை செயல்படுகிறது. இங்கு, பெண்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அங்கிருந்து 22 வயதுடைய 2 இளம்பெண்கள், தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி பாடசாலையில் இருந்து நேற்று வெளியேறினர். பின்னர் அவர்கள், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம், அந்த பெண்கள் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே பாடசாலையில் இருந்து வெளியேறிய பெண்களை அழைத்து செல்வதற்காக, அதன் நிர்வாகிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வடுகபட்டிக்கு சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

பின்னர் அந்த நிர்வாகிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள் அவர்களை அடித்து உதைத்தனர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியகுளத்தை சேர்ந்த அப்துல்காதர் முனீர் (வயது 39), காதர்மீராமைதீன் (28) என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாடசாலை நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பெரியகுளம்- வைகை அணை சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, அந்த பாடசாலையில் தங்கியிருந்த பெண்களை கொடுமைப்படுத்துவதாக நிர்வாகிகள் மீது ஏற்கனவே புகார் வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story