தந்தை இறந்த சோகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி


தந்தை இறந்த சோகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி
x
தினத்தந்தி 11 April 2018 7:36 AM IST (Updated: 11 April 2018 7:36 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே, தந்தை இறந்த சோகத்திலும் ஆசிரியை உதவியுடன் மாணவி நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகில் உள்ள தெய்வநாயகப்பேரியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு(வயது40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கன்னித்தாய். இவர்களுக்கு 2 மகள்கள்.

மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் பேச்சித்தாய், மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். வகுப்பில் அவர் நன்றாக படித்து வந்துள்ளார்.

இவர், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. அரசு தேர்வு எழுதி வருகிறார். இதற்கிடையில், சுடலைக்கண்ணு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பேச்சித்தாய் அழுது புலம்பினார். நேற்று நடந்த கணித தேர்வுக்கு செல்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அவர் இருந்தார்.

இதை அறிந்த அவருடைய வகுப்பு கணித ஆசிரியை வனிதா, நேற்று காலையில் பேச்சித்தாய் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். தந்தை இறந்து விட்டாலும், தேர்வை எழுத வேண்டும், தொடர்ந்து படிக்க வேண்டும் என மாணவிக்கு அவர் ஊக்கம் கொடுத்தார்.

அப்போது, அவர் நன்றாக படிக்கும் பேச்சித்தாய் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவரை தொடர்ந்து படிக்க வையுங்கள். நாங்கள்(ஆசிரியைகள்) அவருக்கு உதவி செய்கிறோம் என வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து தாயார் மற்றும் உறவினர்கள் பேச்சித்தாய் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். தந்தை இறந்த சோகத்தில் இருந்த அவருக்கு ஆசிரியை வனிதா ஆறுதல் கூறி தேற்றி, தன்னுடன் மூலைக்கரைப்பட்டியில் உள்ள தேர்வு மையத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு மற்ற ஆசிரியைகளும் மாணவிக்கு ஆறுதல் கூறியதுடன் ஊக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து அவர், கணித தேர்வை எழுதினார். மையத்தை விட்டு வெளியே வந்த மாணவியை மீண்டும் அந்த ஆசிரியை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் அந்த மாணவி தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். 

Next Story