சிந்துவெளியில் செந்தமிழர் நாகரிகம்


சிந்துவெளியில் செந்தமிழர் நாகரிகம்
x
தினத்தந்தி 11 April 2018 4:00 PM IST (Updated: 11 April 2018 4:00 PM IST)
t-max-icont-min-icon

சிந்துவெளி நாகரிகம் உலக மக்களின் சிந்தையைக் கவர்ந்த விந்தையான நாகரிகம்.

சிந்துவெளி நாகரிகம் பழந்தமிழ் கடலோடும் வணிகரால் உருவாக்கப்பட்ட தமிழர் குடியேற்றப் பகுதி என கிளைடு வின்டர்சு என்னும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். சோக்கிராப் என்னும் சோவியத் நாட்டு அறிஞர் திராவிட மொழிகள் தெற்கிருந்து வடக்கு நோக்கிப் பரவியுள்ளன என உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.

கடல்கொண்ட குமரி நாட்டில் பட்டொளி வீசித் திகழ்ந்த செம்மாந்த நகர நாகரிகத்தின் வடபுலப் பரவலே சிந்துவெளி நாகரிகம் என்பதில் ஐயமில்லை. சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கின்றன. மொழிப்பண்பாட்டுக் கூறுகளிலும் அவை மறைந்து கிடைப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மொழி, பண்பாடு, நாகரிகம் மூன்றும் பிரிக்க முடியாதவை. சிந்துவெளி நாகரிகம் தமிழ் உழவர்களின் அக நாகரிகமாகவும், தமிழ் வணிகர்களின் புற நாகரிகமாகவும் மலர்ந்தது.

பாகிஸ்தானில் இன்றும் பேசப்படும் சிந்தி, தார்திக், மேற்கு பஞ்சாபி மொழிகளில் தமிழ்ச் சொற்கள் ஏராளமாக உள்ளன. கரம்பு நில ஏர்ச்சாலில் சிறிய துண்டு நிலம் உழப்படாமல் இருந்தால் அதனை உழா நிலம் என்பார்கள். பாகிஸ்தானின் தார்திக் மொழியில் அதனை உறா என்கிறார்கள். பிள்ளை பெறாத மலட்டுப் பெண்ணையும் கன்று ஈனாத மாட்டையும் ‘இன்றி’ (பிள்ளை இல்லாதது) என்கிறார்கள். சிந்து வெளியில் செந்தமிழ் பேசப்பட்டது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

உலக நாடுகளில் வேளாண்மை நிலப்பரப்பளவுகளை கணக்கெடுத்தார்கள். அவற்றுள் இந்தியா ஒன்றில் தான் மிகப் பெரும்பான்மையாக 80 விழுக்காடு நிலம் வேளாண்மை நிலமாக மாற்றப்பட்டிருக்கிறது என்னும் அரிய புள்ளி விவரம் கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே பழந்தமிழர் உழவுத் தொழிலுக்குத் தந்த முதலிடத்தை அறியலாம். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆற்றோரங்களிலும் குடியேறியவர்கள் தமிழர்களே. இது தமிழர்களின் நிலவழிப் பரவல்.

பொன், வெள்ளி, செம்பு ஆகிய கனிமங்களைத் தேடி தமிழகக் கடல் வாணிகர்கள் சிந்து வெளிப்பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களைக் குடியேற்றினார்கள். குடியேறியவர்களில் தமிழர்கள் தவிர வேற்று மொழியினர் எவரும் இல்லை. ஏனெனில், 5000 சிந்துவெளி முத்திரைகளிலும் அனைத்தும் தமிழ்ச் சொல்லாகவே உள்ளன. ஒன்று கூட பிற மொழிச் சொல் இல்லை.

நில அகழ்வாராய்ச்சி, மொழி அகழ்வாராய்ச்சி தவிர தொடர்ந்து வரும் பண்பாட்டு கூறுகளைத் தேடினாலும் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி தெரிகிறது. மொகஞ்சதாரோவில் கிடைத்த பெரும்பாலான முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு எருதின் படம் உள்ளது. இதற்கு உச்சிக் கொம்பன் என்று தமிழர்கள் பெயரிட்டிருந்தார்கள்.

ஒற்றைக் கொம்பு எருதான உச்சிக் கொம்பனின் பெயர் தென்னாட்டு மக்களுக்கும் தெரிந்திருந்தது. தென்கன்னட நாட்டுப்புறங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேர்த்திக் கடனாக அப்பகுதி மக்கள் ஒற்றைக் கொம்பு மரச்சிற்பம் செய்து வைக்கிறார்கள். இதனை அவர்கள் கன்னடத்தில் ஒக்கோடு நந்தி என்கிறார்கள். இத்தகைய உச்சிக் கொம்பன் மரச் சிற்பங்கள் மைசூர் பல்கலைக்கழக நாட்டுப்புற அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் மேட்டூர் அணையிலிருந்து மாதேசுவரன் மலைக்குச் செல்லும் வழியில் காவேரிபுரம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கோட்டையூர் மாரியம்மன் கோவிலின் 14 ஊர்களும் சேர்ந்து நடத்தும் பொது பொன்னேர் விழா நடைபெறுகிறது. திருமணமாகாத இளைஞர் இருவருக்கும் தலைப்பாகை கட்டுகின்றனர். ஒருவன் தலைப்பாகையில் ஒற்றைக் கொம்பும், மற்றவன் தலைப்பாகையில் இரட்டைக் கொம்பும் அமைக்கப்படுகிறது.

வெள்ளாளருள் ஒருவன் ஏர் பிடிக்கிறான். தாழ்த்தப்பட்டவருள் ஒருவன் நோன்போடு வந்து வாழ்த்து பாடுகிறான். இந்தப் பொன்னேர் கோவிலை 3 முறை சுற்றி வருகிறது. ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாளை தொட்டடுத்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நோன்பு சாட்டுவார்கள். அந்த செவ்வாய்க்கிழமையை அடுத்துவரும் சனிக்கிழமையன்று மாலை இந்தப் பொன்னேர் உழும் நிகழ்ச்சி தவறாமல் நடைபெறுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி முத்திரையிலுள்ள உச்சிக் கொம்பன் தமிழ் நாட்டுப் பொன்னேரில் எப்படி வந்தது?

இத்தகைய நாகரிகத் தொடர்ச்சிகள் நூற்றுக்கணக்கில் இன்னும் ஏடேறாமல் உள்ளன. ஏடேறாதவற்றை நாடறியாது. எனவே சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சிக்கு அகழ்வாராய்ச்சி ஒன்று மட்டும் போதாது. தென்னாட்டு நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தை விட பழமையானது. சிந்துவெளி நாகரிகத்தை செம்பு, வெண்கல கால நாகரிகம் என்கின்றனர். அதற்கும் முந்தைய கற்கால நாகரிகத்திலேயே சிந்துவெளி எழுத்து தோன்றிவிட்டது என்பதை தமிழ் காட்டுச் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரி (2006) உறுதிப்படுத்தியது.

இந்தக் கற்கோடாரியில் சிந்துவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. அறிஞர் ஐராவதம் மகாதேவனார், இது இந்த நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு எனப் பாராட்டினார். சிந்துவெளி எழுத்து பொறிக்கப்பட்ட கற்கோடாரி வடநாட்டிலும் சிந்துவெளியிலும் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிந்துவெளி கற்கோடாரியில் கோகாங்கன் என்னும் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை நான் படித்துக் காட்டினேன். எனவே, தென்னாட்டு தமிழர் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தை விட தொன்மையானது என்பது உறுதிப்படுகிறது.

பழந்தமிழின் கட்டுமானக் கலைகள் முழுமையாக சிந்துவெளியில் பின்பற்றப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர் மரபில் இருங்கோவேள் என்னும் கோட்டை வேளாளர் மரபு மிகவும் தொன்மையானது. கோட்டை கட்டும் நாகரிகத்தைச் சிந்துவெளி வரையிலும் பரப்பியவர்கள் இவர்களே. கோட்டை, கோட் என்று முடியும் 611 இடப் பெயர்கள் இன்றைய பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருப்பதை வடபுலங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பாலகிருட்டினனார் நிலை நிறுத்திக் காட்டியிருக்கிறார்.

ஹரப்பாவிலுள்ள கோட்டை அகழி அரை வட்டக் கட்டுமானம் கொண்டது. குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் உள்ள பாசனக் குளங்கள் ஹரப்பா கோட்டை அகழி போன்றே அரைவட்டக் கட்டுமானம் கொண்டவையாக உள்ளன.

தமிழர்களின் பழங்கால நீட்டல் அளவுகோல் 11 அடி நீளம் கொண்டது. இதற்கு கோல் என்றே பெயர். இது செவ்வக வடிவ கட்டுமானத்திற்கும் வட்ட வடிவ கட்டுமானத்திற்கும் பொது அளவு கோலாக இருந்தது. மதுரை தேரோடும் தெரு, 44 அடி அகலம் கொண்டது. அதாவது 4 கோல் அகலம், மொகஞ்சதாரோவிலுள்ள பெரிய தெரு 33 அடி அகலம் கொண்டது. அதாவது 3 கோல் அளவு கொண்டது.

தங்கத்தை நிறுத்தும் எடைக் கற்கள் குன்றி மணி எண்ணிக்கையளவைக் கொண்டவை. சிந்துவெளியில் கிடைத்த எடைக் கற்களும் தமிழ் நாட்டில் கிடைத்த எடைக் கற்களும் முற்றிலும் ஒரே சீரானவை என்பதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் பெருவியப்படைந்தனர். தமிழ்நாட்டு தமிழர்களே சிந்துவெளியில் குடியேறினர் என்பதற்கு இவை சான்றாகின்றன.

வீட்டை சாணத்தால் மெழுகி, புள்ளி வைத்து கோலம் போடுவது, வீட்டில் அம்மிக்கல் பயன்படுத்துவது, கூட்டுக் குடும்பங்களுக்காக 7 அடிக்கு 7 அடி வாயில் பொருத்தப்பட்ட தொட்டி வீடு கட்டுவது போன்றவை பழந்தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகும். இவை சிந்துவெளியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டால், தமிழ் நாகரிகத்தின் தொன்மையும் முன்மையும் உண்மையே என உலகம் ஒப்புக்கொள்ளும்.

- பேராசிரியர் இரா.மதிவாணன்

Next Story