காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடைகள் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடின


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடைகள் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. மேலும் ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் உள்பட விவசாய சங்கத்தினர் 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அரியலூரில் ரெயில் மறியல்- கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் 201 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடை, காய்கறி கடைகள், பூக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

முன்னதாக அரியலூர் அண்ணா சிலை முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஏராளமானவர்கள் கூடினர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தொடங்கி வைத்தார். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோஷங் களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கையில் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டு மார்க்கெட் தெரு, தேரடி, சின்ன கடைத்தெரு, ராஜாஜி நகர் வழியாக அரியலூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர். பின்னர் ரெயில் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது ரெயில் என்ஜின் மீது யாரும் ஏறாமல் இருக்க ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரெயிலின் என்ஜின் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதிகாரிகள் மீது மறியலில் ஈடுபட்ட ஒருவர் கற்களை வீசினார். அப்போது பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 450 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அரசு பஸ்சில் ஏற்றி அரியலூர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பஸ்சில் பாதுகாப்பிற்காக போலீசார் செல்லவில்லை.

இந்தநிலையில் மார்க்கெட்தெரு வழியாக பஸ் சென்ற போது அங்கு ஒரு சில கடைகள் திறந்து இருப்பதை கண்ட அவர்கள் பஸ்சை நிறுத்த சொன்னார்கள். அப்போது பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த பலர் இறங்கி திறந்து இருந்த கடைகளுக்குள் சென்று அங்கிருந்த சில பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், அவசர, அவசரமாக கடைகளை பூட்டினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் பஸ்சில் ஏறி தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் நகர வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், சம்பவ இடத்திற்கு வந்து தாக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1-ந்தேதி முதல் இது வரை 3 முறை கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் எங்களை அணுகி காவிரி மேலாண்மை வாரியத்திற்காக கடை அடைப்பு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து நாங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறினோம். அதன்படியே 2 மணிக்கு மேல் கடைகளை திறந்த போது, கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்கள், போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பஸ்களை விட்டு இறங்கி கடைகளை சேதப்படுத்தி உள்ளனர். இதை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் இன்று (நேற்று) முழுவதும் கடைகளை மூடுவது என்று முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அரியலூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் செந்துறை கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் உடையார்பாளையம் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர், தளவாய், இரும்புலிக்குறிச்சி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல கிராமங் களில் கடைகளை அடைத்து பா.ம.க. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம பகுதிகளுக்கு செல்லும் ஒரு சில அரசு பஸ்களும் சில தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன.

இதேபோல் ஆண்டிமடம் கடை வீதியில் உள்ள ஓட்டல், மளிகைகடை, டீக்கடை என அனைத்து கடைகளும் காலை முதலே மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

மீன்சுருட்டி கடைவீதியில் நேற்று பா.ம.க. சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில், கடையடைப்பு போராட்டம் மீன்சுருட்டி, வடவார்தலைப்பு, குருவாலப்பர்கோவில், குறுக்குரோடு ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தா.பழூர் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட் டிருந்தன. 

Next Story