தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நல்லகண்ணு உள்பட 127 பேர் கைது


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நல்லகண்ணு உள்பட 127 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 2:30 AM IST (Updated: 12 April 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நல்லகண்ணு உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நல்லகண்ணு உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதும் போலீசாரின் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 23 ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை இருக்க வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலை விதிமுறைகளை மீறி 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் 25 பைசாவுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த ஆலை செயல்பட அரசு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

ஆலையை மூட வேண்டும்

2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இந்த ஆலையால் நோய்கள் அதிகரித்து உள்ளது. இந்த ஆலையை அனுமதிக்க கூடாது. தற்போது ஆலையை இயக்குவதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று பெறுவதற்காக விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இது பெரிய வெற்றி என்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமாக இருக்குமா? என்பது சந்தேகம். எனவே, இந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சினை ஒரு குறிப்பிட்ட மாவட்ட பிரச்சினை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினை. இந்த காவிரி தண்ணீர்தான் பெரும்பாலான மக்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. 22 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இது மக்கள் போராட்டம். காவிரி இல்லையென்றால் தமிழ்நாடு இல்லை என்ற நிலை உள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்டனம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினையான, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் உச்சநீதிமன்றம் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் கொடுத்து உள்ளது. இதுபிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, தள்ளிப் போட முயற்சி செய்கிறார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு வேடிக்கை விளையாட்டு. இதனை வேண்டுமென்றே நடத்துகிறார்கள். இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அதனை வன்முறை மூலம் போலீசார் அடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது“ என்று கூறினார்.

கைது

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, மாநகர செயலாளர் ஞானசேகர், அழகு, பாலமுருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கரும்பன், பரமசிவன், இடைக்கமிட்டி செயலாளர்கள் சரோஜா, பாபு, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது சிலர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், மறியல் போராட்டம் நடத்தியதாகவும் நல்லகண்ணு உள்பட 127 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story