ஆழ்வார்திருநகரி அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது


ஆழ்வார்திருநகரி அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 12 April 2018 2:00 AM IST (Updated: 12 April 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

நாசரேத், 

ஆழ்வார்திருநகரி அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ரெயிலில் சென்ற கர்ப்பிணி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேசுவரி (வயது 28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வதாக கர்ப்பம் அடைந்த ராஜேசுவரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ராஜேசுவரியின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய மகளுக்கு தங்களது ஊரில் பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தனர்.

எனவே நேற்று ராஜேசுவரியின் தந்தை முருகன் மற்றும் தாயார் ஆகியோர் தங்களுடைய மகளை அழைப்பதற்காக, மேலப்பாளையம் குறிச்சிக்கு சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள், ராஜேசுவரி மற்றும் அவருடைய குழந்தையுடன் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டனர்.

ஓடும் ரெயிலில் பிரசவ வலி...

ஸ்ரீவைகுண்டத்தை கடந்து ஆழ்வார்திருநகரி அருகே ரெயில் சென்றபோது ராஜேசுவரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார். உடனே ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் ரெயில் நடுவழியில் நின்றது. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி ரெயில் நிலையத்துக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த ரெயிலில் பயணம் செய்த நாசரேத்தைச் சேர்ந்த நர்ஸ் ஐரின், ராஜேசுவரிக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு சக பயணிகள் உதவி செய்தனர். அப்போது ராஜேசுவரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ரெயில் புறப்பட்டு ஆழ்வார்திருநகரிக்கு வந்தது. அங்கு 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால், ரெயில் நாசரேத்துக்கு புறப்பட்டு வந்தது.

ரெயில் தாமதம்

இதுகுறித்து நாசரேத் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாசரேத் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், அங்கு ஆம்புலன்சுடன் தயாராக இருந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள், ராஜேசுவரி மற்றும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த 108 ஆம்புலன்சில் ராஜேசுவரி மற்றும் குழந்தையை ஏற்றி, சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ரெயில் சுமார் ¾ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Next Story