சிவகாசி அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு ‘சீல்’ வைப்பு


சிவகாசி அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 12 April 2018 3:45 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து பகுதியிலும் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் கலெக்டர் சிவஞானம் உத்தரவின் பேரில் அனைத்து கோட்டாட்சியர்களும் தாசில்தார்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜ்குமார் ஆய்வு செய்தார். தொழிற்சாலையின் உரிமையாளர் முருகேசன் என்பவர் இறந்து விட்ட நிலையில், சிவகாசியை சேர்ந்த நடராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, ஆலையின் பின்புறம் உரிமம் பெறப்படாத 6 அறைகளிலும் மற்றும் தகர கொட்டகைகள் அமைத்தும் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து வந்தது கண்டறியப்பட்டது.

பட்டாசு உற்பத்தி செய்து வந்த 6 அறைகள் மற்றும் கொட்டகைகள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டன. தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. திறந்த வெளியில் காய வைக்கப்பட்டிருந்த 600 குரோஸ் கருந்திரிகள் மற்றும் 400 குரோஸ் வெள்ளை திரிகள் ஆகியவை தண்ணீர் ஊற்றி அழிக்கப்பட்டன.

சட்ட விரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசு உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் நடராஜ் மற்றும் இறந்து விட்ட உரிமையாளரான முருகேசனின் மகன் கார்த்திக் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் தொழிற்சாலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் கலெக்டருக்கு தாசில்தார் ராஜ்குமார் பரிந்துரை செய்துள்ளார். 

Next Story