பொள்ளாச்சி அருகே, தண்டவாளத்தில் குண்டு வெடித்தது: கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி


பொள்ளாச்சி அருகே, தண்டவாளத்தில் குண்டு வெடித்தது: கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி
x
தினத்தந்தி 12 April 2018 4:45 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் குண்டு வைத்து கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. பொள்ளாச்சி அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

மதுரையில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் பகல் 12.10 மணி அளவில் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது தண்டவாளத்தில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதையடுத்து என்ஜின் டிரைவர் இளங்கோ ரெயிலை உடனடியாக நிறுத்தினார். பின்னர் அவர் கீழே இறங்கி வந்து பார்த்தார். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

என்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் பார்த்தபோது சிறு சிறு உருண்டைகளாக வெடிமருந்துகள் சிதறி கிடந்தன. இதையடுத்து அவர் ரெயில் என்ஜின் மற்றும் தண்டவாளத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்தார். ஆனால் அப்படி ஒன்றும் ஆகவில்லை. இதை உறுதி செய்து கொண்ட பின் அவர் ரெயிலை இயக்கினார்.

அந்த ரெயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் என்ஜின் டிரைவர் இளங்கோ, பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். உடனே அவர்கள் கோவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அந்த ரெயில் கோவைக்கு புறப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், நடேசன் மற்றும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தண்டவாள பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது தண்டவாளத்தில் சிறிய ரக வெடிகுண்டுகள் கிடந்தன. தண்டவாளத்தில் 5 இடங்களில் இதுபோன்று சிறிய குண்டுகள் கிடந்தன. அவை சல்பர், பாஸ்பரஸ் ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்பட்ட சிறிய ரக வெடிகுண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

சல்பர், பாஸ்பரஸ் ஆகியவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி தண்டவாளத்தில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது சிறிய ரக வெடிகுண்டு போன்று உள்ளது. அந்த உருண்டைகள் மீது அழுத்தம் கொடுக்கும்போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அப்படிதான் தண்டவாளத்தில் ரெயில் வந்தபோது இந்த குண்டுகள் வெடித்து உள்ளன. ஒருசில மட்டுமே வெடித்துள்ளன. மற்றவை வெடிக்கவில்லை.

கோவை பயணிகள் ரெயிலின் 4-வது பெட்டி தண்டவாளத்தை கடக்கும் போது இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இந்த சம்பவத்தால் தண்டவாளத்துக்கோ, ரெயிலுக்கோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டோ, டெட்டனேட்டர்களோ வெடித்ததற்கான தடயங்கள் ஏதுவும் இல்லை.

ரெயில் வரும் நேரத்தை கணக்கிட்டு யாராவது தண்டவாளத்தில் இந்த சிறிய குண்டுகளை வைத்தார்களா அல்லது ரெயிலில் பயணம் செய்த பயணிகள் யாராவது குண்டுகளை போட்டு ரெயிலை கவிழ்க்க சதி செய்தார்களா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எனவே மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தண்டவாளத்தில் வெடி வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்து இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுரை கோட்ட ரெயில்வே எல்லையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பழனி ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர். 

Next Story