கடற்கரை மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்தை மீனவர்கள் புறக்கணித்தனர்


கடற்கரை மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்தை மீனவர்கள் புறக்கணித்தனர்
x
தினத்தந்தி 12 April 2018 4:00 AM IST (Updated: 12 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரை மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்தை மீனவர்கள் புறக்கணித்தனர். அதிகாரிகள் மீது அவர்கள் அடுக்கடுக்காக குற்றம் சுமத்தினர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் மத்திய அரசு கடற்கரை மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதையொட்டி புதுவை மண்டல கடற்கரை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கம்பன் கலையரங்கில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் தலைமை தாங்கினார். இதில் 18 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழில் பேசுமாறு கூறினர். இதனை தொடர்ந்து அவர் தமிழில் பேசத் தொடங்கினார்.

அப்போது மீனவர் ஒருவர் குறுக்கிட்டு, “பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாக எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. கடற்கரை மேலாண்மை திட்டம் குறித்து தமிழில் விளக்கமாக துண்டு பிரசுரம் அச்சிட்டு மீனவ கிராம மக்களிடம் வினியோகித்த பிறகே இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்” என்றார்.

மற்றொரு மீனவர், “சுற்றுலா பயணிகளுக்காக செயற்கை மணல் பரப்பு கொண்டு வருகிறீர்கள். இதனால் கிழங்கா மீன், சிங்க இறால், நாக்கு போன்ற மீன்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டு அவை எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை” என்றார். இதுபோல் மற்ற மீனவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும். திட்டம் குறித்து அதிகாரி கூறியதை கேட்டுக்கொண்ட பின்னர் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்றார். அதனை தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும், மீனவ பஞ்சாயத்தார்கள் சக மீனவர்களை சமாதானம் செய்து அமர வைத்தார்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசும் போது, ‘கடற்கரையையும், மீனவர்களையும் காப்பதற்காகத்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்கரையோர மணல் மேட்டை காப்பதற்காகவே மணப்பட்டு பகுதியில் இலவச மனைப்பட்டா திட்டத்தை ரத்து செய்தோம். ஆமை மூட்டையிடும் பகுதிகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதிகளையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்கிறோம். கடலோர பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதியில்லை. மேலும் ஐஸ் பிளான்ட், கடல் நீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு’ என்றார்.

அப்போது, வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் மகாலிங்கம் எழுந்து குறுக்கிட்டு பேசினார். அவர் பேசும்போது, “தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் முகத்துவார நுழைவு அகலமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி மணல் சேர்த்து முகத்துவாரத்தில் அடைப்பு ஏற்பட்டு படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது கலெக்டரோ, துறை அமைச்சரோ, முதல்வரோ வந்து சந்தித்து என்ன தேவை எனக் கேட்கவில்லை. தற்போது உங்களுக்கு தேவை என்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகின்றீர்கள்” என்று குற்றம் சாட்டினார். இதனால் மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீனவ பஞ்சாயத்து தலைவர்கள் மீனவர்களை சமாதானம் செய்தனர். அதை ஏற்காமல் தொடர்ந்து அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:- முகத்துவாரத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் வந்து செல்ல எப்படி அனுமதி வாங்கினீர்கள்? இந்த கூட்டம் கண் துடைப்புக்காகவே நடத்தப்படுகிறது.

கடற்கரையில் இருந்து 20 மீட்டருக்குள் மண்டபம், தனியார் நட்சத்திர விடுதிகள் கட்டப்படுகிறது. இதனை எல்லாம் அரசு கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் வாய்க்காலில் போடப்படும் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெள்ளம் வரும்போது கடலிலும், ஆற்றிலும் குவிகின்றன. இந்த கழிவுகளை அரசு அகற்றுவதில்லை. கடலை பெரிய குப்பை தொட்டியாகத்தான் நீங்கள் (அதிகாரிகள்) பயன்படுத்துகிறீர்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடற்கரை மேலாண்மை திட்டம் எங்களுக்கு தேவையில்லை. எனவே, இந்த கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story