காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பொள்ளாச்சியில் கடைகள் அடைக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

அதன்படி மாவட்ட செயலாளர் கணேஷ் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து பா.ம.க.வினர் உடுமலை ரோட்டில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், நிர்வாகிகள் கண்ணப்பன், வாணி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ம.க.வினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை போலீஸ் திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த போராட்டம் உடுமலை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story